'க்யூ ஆர்' முறையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம்: சட்டவிரோத பதுக்கலை தடுக்குமா?

Prabha Praneetha
2 years ago
 'க்யூ ஆர்' முறையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம்: சட்டவிரோத பதுக்கலை தடுக்குமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, மக்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிக்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, QR நடைமுறையின் கீழ் இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாகவும் இந்த நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, இதுவரையில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

வாகனங்களை பயன்படுத்துவோர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைப்பதால், இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

குறிப்பாக கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 2000 ரூபா முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி, சட்டவிரோத பதுக்கலை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த க்யூவ் ஆர் நடைமுறையின் கீழ் வாரத்திற்கு குறிப்பிட்டளவு எரிபொருள் மாத்திரமே, ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

பஸ்களுக்கு 40 லீட்டர் டீசலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் டீசலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிற்கு 20 லீட்டர் டீசலும், அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் டீசலும், லாரிகளுக்கு 50 லீட்டர் டீசலும் வாரமொன்றிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டர் பெட்ரோலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் பெட்ரோலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிக்கு 20 லீட்டர் பெட்ரோலும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் பெட்ரோலும், லாரிகளுக்கு 50 லீட்டர் பெட்ரோலும் வாரமொன்றிற்கு ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட எரிபொருள் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு வாராந்தம் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் ரகம், வாரமொன்றிற்கு தேவையான எரிபொருளின் அளவு, எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை தெரிவு செய்து, அபிரதேச செயலகங்களில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், முச்சக்கரவண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயம் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்துவோர் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.