மகாவலி, களனி, நில்வள மற்றும் களுகங்கை நிரம்பி வழியும் நிலையில்: 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Prathees
2 years ago
மகாவலி, களனி, நில்வள மற்றும் களுகங்கை நிரம்பி வழியும் நிலையில்: 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாகாணங்களின் 05 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் நேற்று (2ஆம் திகதி) பிற்பகல் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, தென் மாகாணத்தில் காலி மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமை காரணமாக 1766 குடும்பங்களைச் சேர்ந்த 7649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மற்றும் அம்பேகமுவ பிரதேசங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கண்டி பஸ்பாகே கோரளை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் காணாமல் போயுள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேர் 16 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 03 முதல் 3.5 மீற்றர் வரை உயரலாம்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்ந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக மகாவலி, களனி, நில்வள மற்றும் களுகங்கை, கெஹல்கமு ஓயா போன்ற பல பிரதேசங்களில் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலைமை தொடரும் எனவும் நீர்ப்பாசன பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்)  டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

எனினும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆறுகள் மற்றும் கெஹல்கமு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் (01) கணிசமான மழைவீழ்ச்சி இல்லாததால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.