பிரித்தானியா பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி-ரிஷி சுனக்குக்கு பொதுமக்கள் ஆதரவு

Prasu
2 years ago
பிரித்தானியா பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி-ரிஷி சுனக்குக்கு பொதுமக்கள் ஆதரவு

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பல விவாத மேடைகளில் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ். இந்த விவாத நிகழ்ச்சியை நடத்துபவர் பல கேள்விகளை எழுப்புவார். 

அத்துடன் மக்களும் பல கேள்விகளை எழுப்புவதுண்டு. இவ்விவாதங்களுக்குப் பிறகு விவாதங்களைக் காணும் பார்வையாளர்கள் வாக்களிப்பது உண்டு. இந்த நிலையில் நேற்று நடந்த விவாத நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், பின்தங்கி இருக்கிறார் என கூறப்படும் ரிஷி சுனக்குக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர் வேட்டிவ் கட்சியினர் இடையே நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள், பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிக ஆதரவு என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், விவாத நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பெரியளவில் ரிஷிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். 

மின்னணு வாக்களிப்பு அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து மக்கள் கைகளை உயர்த்தி யாருக்கு தங்களது ஆதரவு என்பதைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரங்கத்தில் கூடியிருந்த மக்களில் பெரும்பான்மையோர் கைகளை உயர்த்தி ரிஷிக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

லிஸ் ட்ரஸ், தான் முன்பு தெரிவித்த சில கருத்துக்களை பின்னர் தான் கூறவேயில்லை, ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன என்று கூறி இருந்தார். அந்த விடயம் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

இதுபோன்ற ஒரு நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆதரவு ரிஷிக்கு போதுமான அளவு இல்லை என கூறப்பட்டாலும், பொதுமக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை இச்சம்பவம் காட்டியுள்ளது. 

விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய Kay Burleyயே, தான் இம்முடிவை எதிர்பார்க்கவில்லை எனகூறி தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சூழல் அரங்கத்தில் உருவாகியது குறிப்பிடத்தக்கது.