சர்ச்சைக்குரிய கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

Prathees
2 years ago
சர்ச்சைக்குரிய கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

சீன யுவான்வாங் 5 கப்பல் இலங்கைக்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே மேலும் ஆலோசனைகள் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய யுவான்வாங் 5 கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவிருந்தது. எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனாவின் யுவான்வாங் 5 கப்பல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது, இது 2017 இல் கட்டப்பட்டது மற்றும் 11,000 டன் கொள்கலன்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியானிங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவான் அருகே சீனாவின் கிழக்கு கடல் எல்லையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் இந்தியா உன்னிப்பாக கவனம் செலுத்திய நிலையில் இந்த கப்பல் வருவது குறித்து சர்ச்சையான சூழ்நிலை உருவானது.