கியூபாவில் எண்ணை கிடங்கில் மின்னல் தாக்கியதில் 120 பேர் படுகாயம்
கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணை சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது.
ஒரு கலனில் மின்னல் தாக்கி தீப்பிடித்தபோது அருகில் இருந்த மற்றொரு கலனுக்கு தீ பரவியதால் பயங்கரமாக வெடித்து தீப்பிடித்தது. பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழும்பியது.
கரும் புகை வெளியேறியபடி தீ கொளுந்துவிட்டு எரிகிறது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எண்ணை கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு கரும்புகை பரவியுள்ளது. இந்த விபத்தில் 121 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வந்தாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. எண்ணை கிடங்குக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க நட்பு நாடுகளின் சர்வதேச நிபுணர்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நாடியுள்ளதாக கியூபா நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.