வங்காள தேசத்தில் பெற்றோல் டீசல் விலை 50 சதவீதம் உயர்வால் பொதுமக்கள் போராட்டம்
வங்காளதேச அரசு கடந்த 5-ந்தேதி எரிபொருள் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியது. இதில் பெட்ரோல் விலை 51.7 சதவீதம் அதிகரித்தது.
டீசல் விலையும் 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது. மேலும் கியாஸ் விலையும் அதிகரித்துள்ளது. 1971-ம் ஆண்டு வங்காள தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது எரி பொருள் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் விலைவாசியும் அதிகரித்துவிட்டது.
இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள். விலை உயர்வு கடந்த 6-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் கடந்த 5-ந்தேதி இரவு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது.
வங்காள தேச பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பெட்ரோல்-டீசலை குறைவான விலைக்கு விற்றதாகவும், இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனை ஈடுகட்ட தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.