22வது திருத்தத்தை ஒருமனதாக நிறைவேற்றுவது கடமையாகும் - முன்னால் சபாநாயகர்

#SriLanka
Prasu
2 years ago
22வது திருத்தத்தை ஒருமனதாக நிறைவேற்றுவது கடமையாகும் - முன்னால் சபாநாயகர்

இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைகளை கடுமையாக திரிபடையசெய்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்துவிட்டு, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய, இந்த நடவடிக்கையை 19து திருத்தத்தை மீள அமுலாக்கும் முற்போக்கான நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். 

ஆகையால், 22வது திருத்தச் சட்டத்தை மக்கள் பிரதிதிகளில் ஒருமனதாக நிறைவேற்றுவதே அவர்களின் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான பல அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் நீடிப்பதற்கு மேற்கொண்டிருந்த முயற்சிகளை தோல்வியடையச் செய்து. எதிர்வரும் 6ம் திகதி முதல் அவற்றை இரத்துச் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஜனநாயகத்தை போற்றும் அனைவரினதும் பாராட்டை பெரும் நடவடிக்கையாகும்.

இதுபோன்ற ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்காக முன்வந்த ஜனாதிபதிக்கும், நீதியமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது என அவ்வியக்கம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பில் செப்டெம்பர் மாதம் 6ம் திகதியன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தில் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான கடமையை ஆற்றுவார்கள் என்று எண்ணுகிறோம். அதேபோன்று மேற்படி திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட​வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதும், மக்களின் நலனுக்காக பணி செய்வதும், எதிர்கால சந்ததியினருக்கு மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதும் எமது நாட்டின் மக்கள் பிரதிநதிகளின் கடமையாகும். அந்த கடமைகளை ஆற்றுவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

முந்தைய அரசாங்கம் 20வது திருத்தத்தை நிறைவேற்றிய நாள் முதல், அதனை அகற்றுவதற்கான போராட்டத்தில் நாம் ஈடுபட்டிருந்தோம். அதேபோன்றும் நாட்டின் நலனுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல், பொருளாதார, சமூக சீர்த்திருத்தங்களுக்காகவும் நாம் முழுமையாக எமது கடமையைச் செய்வோம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.