நிதிக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கியிருந்தால் நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் - லக்ஷ்மன் கிரியெல்ல

Kanimoli
2 years ago
 நிதிக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கியிருந்தால் நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் - லக்ஷ்மன் கிரியெல்ல

நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி ஏற்படுமென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்திருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுக்களின் ஊடாக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் நாங்களும் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தெரிவித்து வருகின்றோம். தெரிவுக்குழுக்களின் முக்கியத்துவம் பலருக்குத் தெரியாது.

ஓகஸ்ட் 2020 தேர்தலுக்குப் பிறகு, நிதிக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நிலையியற் கட்டளையின் பிரகாரமே கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 121 இன் கீழ் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும். இது எதிர்க்கட்சிக்கு சொந்தமானது.

ஆனால் அப்போதைய சபாநாயகரும், முன்னாள் அவைத்தலைவரும் அந்த நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி எதிர்க்கட்சிக்கு வழங்காமல் ஆளுங்கட்சிக்கு வழங்கினர்.

பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என இரண்டாண்டுகளுக்கு முன்பே நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் ஹர்ஷ டி சில்வாவை முன்மொழிந்திருந்தோம். நாடாளுமன்றத்தில் அவர் எச்சரிக்கை விடுத்தாலும், நிதிக் குழுவின் தலைவராக இருந்திருப்பின்,அவரது அறிக்கைகளுக்கு அதிகாரபூர்வ மதிப்பு இருந்திருக்கும்.

அப்போது அவரை நியமித்திருந்தால், நாடு வங்குரோத்து ஆகும் அல்லது உண்மை நிலமைகள் என்ன என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாட்டுக்கு கூறியிருப்பார்” என்றார்.