வரலாற்றில் இதுவரை சந்திக்காத துரதிஷ்டவசமான காலகட்டத்தை இலங்கை கடந்து கொண்டிருக்கின்றது: சபாநாயகர்

Mayoorikka
2 years ago
வரலாற்றில் இதுவரை சந்திக்காத துரதிஷ்டவசமான காலகட்டத்தை இலங்கை கடந்து கொண்டிருக்கின்றது: சபாநாயகர்

வரலாற்றில் இதுவரை சந்திக்காத துரதிஷ்டவசமான காலகட்டத்தை இலங்கை கடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அனைத்து பிரஜைகளும் நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன் வர வேண்டும் என முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.   

தொழிற்சங்க தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களுக்கு மற்றவர்களை விட அதி முக்கிய கடமை இருப்பதாக நாம் கருதுகிறோம். நாட்டில் தொழில் புரியும் பல மில்லியன் மக்களை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள்.  

நாட்டின் நிர்வாகம், உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணை புரியும் அனைத்து செயற்பாட்டுகளையும் உங்களின் அங்கத்துவர்களே வழிநடத்துகின்றனர்.  உங்களின் பெறுமதியையும், வலிமையையும் நாம் நன்கு புரிந்து கொண்டு இருப்பதாலேயே இந்த கலந்துரையாடலில் பங்கு பெறுமாறு தொழிற்சங்க தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதை ஆட்சியாளர்கள் தங்களது தலையாயக் கடமையாக கருத வேண்டும். 24 மணித்தியாலங்களுக்கான தடையில்லா மின்சார விநியோகம், பால்மா, எரிவாயு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான நியாய விலை நிர்ணயித்தல் துரிதமாக இடம்பெற வேண்டும். அப்போது தொழில் துறை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறை ஆகியவை துரித வளர்ச்சியை அடையும். 

கடந்த இரண்டு வருட காலங்களாக கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தாக்கங்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.  கல்வியை எமது பெருமதி வாய்ந்த முதலீடாக கருத வேண்டும். 

முற்று முழுதாக அழிவை சந்தித்திருக்கும் விவசாய துறையை மீள்கட்டியெழுப்ப வேண்டும். விவசாயத் துறை சார்ந்து கடந்த அரசாங்கம் தவறான முடிவுகளை மேற்கொண்டிருந்தது என்கிறார்.