ஈராக் ஷியா தலைவர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் - 30பேர் மரணம்

#Iraq #Death
Prasu
2 years ago
ஈராக் ஷியா தலைவர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் - 30பேர் மரணம்

ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார். 

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லை. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார். 

அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது. பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தினார். 

இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பாக்தாத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். 

பாக்தாத்தில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதையடுத்து, அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. 

இதேபோல் பாக்தாத் முழுவதும் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த சண்டைகளால் அந்த நகரமே கலவர பூமியானது. 

இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இடைக்கால பிரதமர் முஸ்தபா அல் கதாமி நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்