முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் தாங்கி மீட்பு:விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம்

Prathees
2 years ago
முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் தாங்கி மீட்பு:விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனியார் காணியொன்றில் புதையுண்டிருந்த எரிபொருள் பௌசர் தாங்கியை நேற்று (31) மாலை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு நீதவான் ஆர். சர்வணராஜா அவர்களின் பங்குபற்றுதலுடனும், கட்டளைகளுடனும் எரிபொருள் பௌசரை மீட்கும் பணிகள் இடம்பெற்றன.

புதுக்குடியிருப்பு பொலிஸார், முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கிராமசேவகரின் தலைமையில் குறித்த எரிபொருள் பௌசர் தாங்கி முல்லைத்தீவு நீதவானால் மீட்கப்பட்டது.

பௌசர் எரிபொருள் தாங்கி மீட்கப்பட்ட போது, ​​அது மிகவும் மோசமாக சிதைந்திருந்ததாகவும், அதில் எரிபொருள் இல்லை எனவும், மேலும் எரிபொருளைப் பயன்படுத்துவதற்காகஇ யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், யுத்த காலத்தில், அத்தியாவசிய சேவைகளாக தெற்கில் இருந்து வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பவுசர்கள், வவுனியா மற்றும் கிளிநொச்சிக்கு இடையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த புலி உறுப்பினர்களால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த எரிபொருள் தாங்கிகளில் ஒன்று இவ்வாறு மீட்கப்பட்ட பௌசர் தாங்கியாக இருக்கலாம் என விசாரணை செய்யும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.