எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவரை உதைத்த இராணுவ லெப்டினன்ட் மீது ஒழுக்காற்று விசாரணை

Prathees
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவரை உதைத்த இராணுவ லெப்டினன்ட் மீது ஒழுக்காற்று விசாரணை

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் எடுக்க வந்த நபரை உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மற்றுமொரு இராணுவத்தினரும் இவரைத் தாக்குவதை அவதானித்து அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை செப்டெம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் அமுல்படுத்தி அறிவிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு படையின் வாரியபொல முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் கேணல் பிரிதி விராஜ் குமாரசிங்கவுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பிரதீப் அத்தநாயக்க என்ற நபரே தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 03 ஆம் திகதி யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் சாதாரண மனிதரை எட்டி உதைத்த விதம் தொடர்பில் இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி பிரதிவாதியான லெப்டினன்ட் கேணல் மற்றும் இராணுவ சட்டப் பணிப்பாளர் ஆகியோர் ஆணைக்குழுவில் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு கூறுகிறது.

குறித்த நபர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாத நபர் எனவும் அவர் மீதான தாக்குதல் தீங்கிழைக்கும் தாக்குதல் அல்ல எனவும்,

கமரா காட்சிகள் மூலம் இது அவதானிக்கப்படுவதாக லெப்டினன்ட் கேணல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை தாக்கும் மனஉறுதி இருந்திருந்தால், அவரை தொடர்ச்சியாக தாக்கியிருக்கலாம் அல்லது மக்கள் பார்க்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் எனவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.