அனைத்து தமிழ் அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை இலங்கை அரசுடன் தொடர்புகொள்வது சாத்தியமற்றது - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்

Prasu
2 years ago
அனைத்து தமிழ் அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை இலங்கை அரசுடன் தொடர்புகொள்வது சாத்தியமற்றது - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்

அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமற்றது என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

அந்தவகையில், “அமெரிக்க மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் அமைப்புகள், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், வட அமெரிக்கா தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், அமைதி மற்றும் நீதிக்கான ஒன்றுபட்ட குழு – தென்னாபிரிக்கா, தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கை குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்குழு, உலகத்தமிழர் அமைப்பு” ஆகிய அமைப்புக்கள் கைச்சாத்திட்டு வெளியான அறிக்கையில் மேலும் தெரியவருகையில், 

அமெரிக்க மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாகிய நாம், இலங்கையின் நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளை அவதானித்து வருகிறோம்.

மக்களின் அவலநிலை குறித்து நாம் கவலை கொள்கின்றோம், அவர்களிற்கு உதவி தேவையாக உள்ள இந்த நிலையில் நாம் அவர்கள் மீது ஆழ்ந்த அனுதாப உணர்வைக் கொண்டுள்ளோம்.

இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் பங்குள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அமெரிக்காவும் மற்றும் அனைத்து சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் ஒழுங்காக அமைக்கப்பட்டு எவ்வித இடையூறும் இன்றிச் செயற்பட்டு வரும் அமைப்புக்கள் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு அமைப்பையும் அல்லது எங்களில் எவரையும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தடை செய்வதோ தடைகளை நீக்குவதோ நாம் வாழும் ஜனநாயக நாடுகளில் எங்களில் யாருக்கும் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்வதால், அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை, புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமற்றது.

எமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், அவ்வாறான எந்த ஒரு கூட்டத்திலும், அனைத்து தமிழ் கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச நிறுவனம் பங்குபெற வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கை அரசாங்கத்தின் நேர்மையான நோக்கத்திற்கு அடையாளமாக, அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமே, மக்களிற்கு செழிப்பு, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பெற்றுத் தருவதற்கான அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்த நாங்கள் உடன்படுவோம். – என்றுள்ளது.\