கோட்டாபயவின் ஆட்சி காலத்தில் முறையற்ற வழிகளில் டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டது - நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல

Kanimoli
2 years ago
கோட்டாபயவின் ஆட்சி காலத்தில் முறையற்ற வழிகளில் டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டது - நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல

கோட்டாபயவின் (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் முறையற்ற வழிகளில் டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதை மாற்ற சரியான வழிமுறையொன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல (Thalatha Atukorale) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு வருமானம் பெரும் பங்காற்றியிருந்தது. தற்போது இந்த நிலை மாறி வருமானம் குறைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும் நாட்டின் செலவீனங்களை குறைப்பதற்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

வெளிநாட்டில் வேலை செய்வோர் இலங்கைக்கு சரியான முறையில் பணம் அனுப்ப தேவையான எந்தவொரு வழிமுறையும் ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் இருக்கவில்லை.

மேலும், வெளிநாட்டில் இருந்து வருமானங்களை பெற்றுக்கொள்ள சரியான வழிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்காது சுற்றுலாத் துறையை எவ்வாறு ஜனாதிபதி மேம்படுத்த நினைக்கிறார் என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை எவ்வாறு மீட்க போகிறார் என்பது குறித்தும் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.”என கூறியுள்ளார்.