நாட்டையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார் அஜித் நிவாட் கப்ரால் - ஹர்ஷ டி சில்வா

Prasu
2 years ago
நாட்டையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார் அஜித் நிவாட் கப்ரால் - ஹர்ஷ டி சில்வா

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார். 

எனவே தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றார் என குற்றஞ்சாட்டுவது அடிப்படையற்றது. 

தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (02) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளோம். 

இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமது தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் , நாட்டின் நிதி நிலைமை குறித்து பாராளுமன்றிற்கு குறிப்பிடவில்லை என்றும் அவர் மீது குற்றஞ்சுமத்துவது அடிப்படையற்றதாகும்.

நாட்டின் நிதி நிலைமை தொட்பில் 2020 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போது நிதியமைச்சர் சார்பில் அந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவார்ட் கப்ரால்இ நாட்டில் 2100 மில்லியன் டொலர் இருப்பதாகவும் பின்னர் 1800 டொலர மில்லியன் இருப்பதாகவும் கூறினார்.

அஜித் நிவார்ட் கப்ரால் நிதி நிலைமை தொடர்பில் இவ்வாறு தெரிவித்து , நாட்டையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழி நடத்தினார். 

ஆனால் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க அப்போதைய காலக்கட்டத்தில் பயன்படுத்த கூடிய வெளிநாட்டு கையிருப்பு 20 மில்லியன் டொலர் முதல் 30 மில்லியன் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி நிலைமை குறித்து நாங்கள் குறிப்பிட்ட எதனையும் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. 

இது தொடர்பில் அஜித் நிவார்ட் கப்ரால் பொய்யுரைக்கிறார் என்பதை முன்னாள் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் சிற்றுண்டிசாலையில் வைத்து குறிப்பிட்டேன். இருப்பினும் அவரும் அதனை பொருட்படுத்தவில்லை.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரியிடம் தொலைபேசி ஊடாக உரையாடினேன். 

டொலர்  கையிருப்பு மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளதை அவர் ஏற்றுக்கொண்டார்.இந்தியாவிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என்பதை குறிப்பிட்டேன்.

இவ்வாறான பின்னணியில் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகிய இருவரும் நாட்டை வங்குரோத்து நிலையடைய செய்தார்கள் என்ற தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஆளும் தரப்பில் ஒருசிலர் முயற்சிக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார மீட்சிக்காக ஒன்பது விடயங்களை முன்வைத்தார். 

முறைமைகளை நீக்கி சட்ட வரைபிற்குள்ளான மீள் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடன் மறுசீரமைக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இடமளிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாட்டில் இருக்கவில்லை. 

தவறான விடயங்களை முன்வைத்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்றார்.