அனைத்து பிரஜைகளும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால் நெருக்கடியில் இருந்து மீள முடியும் - அனுரகுமார திஸாநாயக்க

Kanimoli
2 years ago
அனைத்து பிரஜைகளும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால் நெருக்கடியில் இருந்து மீள முடியும் - அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைத்து பிரஜைகளும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால்,இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்படி நடந்தால், மக்கள் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த அரசாங்கத்திற்கு சுமார் இரண்டு ஆண்டு காலத்தை வழங்கலாம்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கிடைத்த மக்கள் ஆணையின் மூலம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மக்களின் ஆணைக்கு எதிரானது.

நெருக்கடியில் இருந்து மீளவதற்கு மக்கள் ஆணை அவசியம். தற்போது மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.