ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Kanimoli
2 years ago
ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்

ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் விவரிக்கும் கடிதம் ஒன்றை பொலிஸ்மா அதிபரிடம் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயவர்த்தன கையளித்துள்ளார்.

அந்த கடிதத்தின்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தனியார் பஸ் சேவை ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டது. பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்டன. கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர், எங்களிடம் 18,000 தனியார் பஸ்கள் இருந்தன, பஸ் உரிமையாளர்கள் குத்தகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த முடியாததால், 13,000 ஆகக் குறைக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் இன்னும் கறுப்புப் பட்டியலில் உள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்க தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தனியார் பஸ் நடத்துநர்கள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மாத்திரமே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, நாளாந்த தனியார் பஸ் சேவை குறைக்கப்பட்ட நிலையில், நாளின் இறுதியில் வருமானம் கிடைக்காமல் போனது.

இந்தப் போராட்டத்தால் சுமார் 40,000 பஸ் நடத்துநர்கள் மற்றும் 8,000 பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உதிரி பாகங்களின் விலை உயர்வும் தொழில்துறையின் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்கியதற்காக போராட்டக்காரர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் பணம் பெறுவார்கள், ஆனால் பஸ்களை இயக்குவதன் மூலமே நாங்கள் சொந்தமாக சம்பாதிக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பஸ்களை வழமைபோல் இயக்க அனுமதித்து போராட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கெமுனு விஜேயவர்த்தன பொலிஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார்.