முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச கருத்து

Mayoorikka
2 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச கருத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரே சிறந்த முடிவினை எடுப்பார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அது தொடர்பிலும் அவரே முடிவினை மேற்கொள்வார் என தெரிவித்த மகிந்த ராஜபக்ச பதிலளிக்க மறுத்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தனது வாக்கு பலத்தை தக்கவைத்துக்கொள்ள ராஜபக்சக்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவார் எனவும், அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினால் மாத்திரமே ராஜபக்சக்களை பாதுகாக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை மீறல்களுக்காக அவர் மீது வழக்குத் தொடர காத்திருக்கின்ற நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினரானால் அந்த வழக்குகளில் இருந்தும், சில தனி நபர்களிடமிருந்து தப்பிக்க தேசியப்பட்டியல் ஊடாக அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.