இலங்கையின் அரசியல் ஸ்திரமின்மை ஐ.எம்.எவ்வின் பரிந்துரைகளில் தாக்கத்தைச் செலுத்தும்! தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
இலங்கையின் அரசியல் ஸ்திரமின்மை ஐ.எம்.எவ்வின் பரிந்துரைகளில் தாக்கத்தைச் செலுத்தும்! தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மை, சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும்போதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்காக அரசாங்கம் சமூகத்துக்கான செலவீனங்களை அதிகரித்த போதிலும், அரசாங்கம் மீதான பொதுமக்களின் ஆதரவு பலவீனமாகவே காணப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய பகுதி என்றும் தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றும் வரை ஊழியர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட மாட்டாது என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கான நிதி உத்தரவாதத்தை கடனாளர்களிடமிருந்து பெறுவதும் பரிந்துரைகளில் ஒன்று என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை தாங்கமுடியாது என மதிப்பிட்டுள்ளதால், கடனாளிகளுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் கடன் நிவாரணத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் தரமதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.