அர்ஜென்டினா பெண் துணை அதிபரை கொல்ல முயற்சி - துப்பாக்கி கோளாறால் உயிர் தப்பிய அதிபர்

Prasu
2 years ago
அர்ஜென்டினா பெண் துணை அதிபரை கொல்ல முயற்சி - துப்பாக்கி கோளாறால் உயிர் தப்பிய அதிபர்

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். மூத்த பெண் அரசியல் தலைவரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 2 முறை அர்ஜென்டினா அதிபராக பதவி வகித்துள்ளார். 

இந்த பதவி காலத்தில் அவர் அரசு நிதியை கையாடல் செய்ததாக ஊழல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

எனினும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஊழல் வழக்கு விசாரணைக்காக கிறிஸ்டினா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். 

அப்போது அவரை வரவேற்பதற்காக அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். காரில் வந்து இறங்கிய கிறிஸ்டினா தனது ஆதரவாளர்களிடையே வாழ்த்துகளை பெற்று கொண்டிருந்தார். 

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென கிறிஸ்டினாவின் முகத்துக்கு அருகே துப்பாக்கியை கொண்டு சென்று சுட முயற்சித்தார். ஆனால் நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை. 

இதனால் கிறிஸ்டினா நூலிழையில் உயிர் தப்பினார். இதையடுத்து கிறிஸ்டினாவின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுடமுயன்ற அந்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.