ரத்துபஸ்வல கொலை கலாசாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சி – எதிர்க் கட்சித் தலைவர்

Mayoorikka
2 years ago
ரத்துபஸ்வல கொலை கலாசாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சி – எதிர்க் கட்சித் தலைவர்

தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலை கலாசாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்ஷவினரை பாதுகாக்கும் பொறுப்பையும் அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

ராஜபக்ஷர்களை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான தரைவிரிப்பு விரிக்கப்படுகின்ற சூழ்நிலையில் மறுபுறத்தில் மக்களுக்கு மலர் வளையம் வைக்கப்படுகின்றது.

நாடு தற்போது இழந்து நிற்கும் நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ஷ அரச குடும்பம் மீளப்பெற்றுத் தர வேண்டும் என்றே மக்கள் கோருகின்றனர். எனவே, மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து மக்களின் பொது சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவோம்.

எமது ஆட்சியின் கீழ், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும்.

ராஜபக்ஷவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும்கூட தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலை கலாசாரத்தை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது.

ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுகின்றனர்.

இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க் கட்சி என்ற வகையில் முழுமையாக நாம் எதிர்க்கின்றோம் என்றார்.