தடுப்புக்காவலில் உள்ள செயற்பாட்டாளர்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

Prathees
2 years ago
தடுப்புக்காவலில் உள்ள செயற்பாட்டாளர்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் உறுப்பினர்களான வெல்வேவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் ஜிவந்த குணதிலக்க ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர்.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பிரசன்ன அல்விஸ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, தலங்கம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சட்டத்தரணி கமல் குணரத்ன, மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாகவும், அதில் கலந்துகொண்ட பேலியகொட பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று தாம் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த போதே கைது செய்ததாகவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். நியாயமான காரணமின்றி தம்மை கைது செய்து தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.