பிரித்தானிய புதிய பிரதமருக்கு விஷேட வாழ்த்துத் தெரிவித்த ரணில்

Lanka4
2 years ago
பிரித்தானிய புதிய பிரதமருக்கு விஷேட வாழ்த்துத் தெரிவித்த ரணில்

ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள எலிசபெத் ட்ரஸிற்கு  (Elizabeth Truss) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் வரலாற்றினால் பிணைக்கப்பட்டிருப்பதுடன் நீண்டகால நட்புறவைக்  கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ள ட்ரஸ்ஸின் முதிர்ச்சியும் அனுபவமும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக இலட்சியங்களால் வலுவூட்டப்பட்ட பலதரப்பு கூட்டாண்மை அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான  தொடர்புகள் பரந்தளவில் வியாபித்து காணப்படுகின்றன. பொதுநலவாய நாடுகளுடன் பிரித்தானியா ஆரம்பித்துள்ள புதிய பிளாட்டினம் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய இராச்சியத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில், இலங்கை இணைக்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி  பாராட்டியுள்ளார்.

2023 பெப்ரவரி மாதத்தில், இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்துடனான தனது ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்த இலங்கை எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.