நிதி நெருக்கடி நிலையில் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி

Kanimoli
2 years ago
நிதி நெருக்கடி நிலையில் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி

நிதி நெருக்கடி நிலையில் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

அமெரிக்க நிதிச் செயலர் ஜேனட் யெல்லன் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பாரிஸ் கிளப் கொள்கைகளுக்கு இணங்க உறுதிமொழிகளை வழங்கும் என்றும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற அமெரிக்க நிதி நிறுவனங்களுடன் இதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஏற்கனவே பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், கடன்களை மறுசீரமைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் கடனாளிகளின் முறைசாரா குழுவான பாரிஸ் கிளப், இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், பாரிஸ் கிளப் அல்லாத உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைத்து தேவையான நிதி உத்தரவாதங்களை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் இலங்கையின் கடன் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை உறுதி செய்வதற்கும் தயாராக இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 48 மாத ஏற்பாட்டிற்காக இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் முடிவடைந்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை (SLA) பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கையானது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.