போதைப்பொருள் வழக்கை விசாரிக்க வரலாற்றில் முதல்முறையாக மூன்று நீதிபதிகள்  நியமனம்

Prathees
2 years ago
போதைப்பொருள் வழக்கை விசாரிக்க வரலாற்றில் முதல்முறையாக மூன்று நீதிபதிகள்  நியமனம்

போதைப்பொருள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசரின் (ட்ரயல் அட் பார்) நடவடிக்கைகள் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகள் ஐவரையும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உயர்நீதிமன்ற மூவரடங்கிய அமர்வு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இலங்கைக்கு கடத்துவதற்காக 198 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு வந்த போது கடலில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக விசேட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான வழக்கை விஷேட வழக்காக விசாரிப்பதற்கு மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழாம் ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர்  விடுத்த கோரிக்கையை பிரதம நீதியரசர் ஜயத ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், 198 கிலோகிராம் ஹெரோயினை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் ஹெரோயின் கையிருப்பு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.