அமைச்சர்களின் வேலைப்பழுவை குறைப்பதற்காகவே இராஜாங்க அமைச்சு நியமனம் - ரமேஷ் பத்திரண

Prasu
2 years ago
அமைச்சர்களின் வேலைப்பழுவை குறைப்பதற்காகவே இராஜாங்க அமைச்சு நியமனம் - ரமேஷ் பத்திரண

அமைச்சரவை மிகக்குறைந்தளவான அமைச்சர்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அமைச்சர்களுக்குமான பொறுப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களுக்கு காணப்படும் வேலைப்பழுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பிரத்தியேகதமாக நிதி ஒதுக்கிடப்பட மாட்டாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

தற்போதுள்ள அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலைமையின் போது அவர்களுக்கு சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க வேண்டியேற்படுவதால் வேலைப்பழு அதிகமாகவுள்ளது.

எனவே தான் வேலைகளை இலகுவாக்குவதற்காக இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்படவில்லை. 

பிரதான அமைச்சிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழேயே இவற்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு இவற்றுக்கு செயலாளர்களும் நியமிக்கப்படப் போவதில்லை.

மாறாக குறிப்பிட்ட பிரதான அமைச்சின் மேலதிக செயலாளர்கள் , இராஜாங்க அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுவார்கள். அமைச்சுப்பதவிகள் எண்ணற்றளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறி விமர்சனங்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் என சுமார் நூறு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது மிகக் குறைந்தளவிலான அமைச்சு பதவிகளே வழங்கப்பட்டுள்ளன என்றார்.