ரணிலின் அரசாங்கம் விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் - செஹான் திசாநாயக்க

Kanimoli
2 years ago
ரணிலின் அரசாங்கம் விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் - செஹான் திசாநாயக்க

ரணிலின் அரசாங்கம் விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் செஹான் திசாநாயக்க சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று(13.09.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாத வகையில் கல்வியை தொடர்வதற்கு உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சிக்கல் நிலைமை காரணமாக மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இலங்கையிலே மூன்றில் ஒரு மாணவர் மந்த போசாக்கினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இது இவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தான் இலங்கையில் உயர்கின்ற விலைவாசி காரணமாகவும் உயர்கின்ற வரிகள் காரணமாகவும் மாணவர்கள் தங்களுடைய கல்வி உபகரணங்களினை பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பயிற்சி புத்தகங்களை வாங்க முடியாத ஒரு சூழலுக்கு பல மாணவர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். எனவே இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாத வகையில் கல்வியை தொடர்வதற்கு உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் தான் கடதாசிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரிகளை அகற்றி, விலையினை குறைத்து, மாணவர்கள் பயிற்சி புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

இதேவேளை இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுடைய வாழ்க்கை தரத்தினை கொண்டு நடத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த பொருளாதார சிக்கல் நிலை காரணமாக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும் அரசாங்கம் இவர்களுக்கு எந்த ஒரு சலுகைகளையும் பெற்றுக் கொடுக்காது. விலைவாசிகளை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் கூறுகின்றது, அரசு ஊழியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று இந்த அரச ஊழியர்களை அதிகமாக இணைத்துக் கொண்டது யார், அரசாங்கமே அரசு ஊழியர்களை அதிகமாக இணைத்து கொண்டார்கள்.

இவ்வாறு இணைத்ததன் பின்னர் அதிகமாக இருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை.

அடுத்து வருகின்ற வரவு செலவு திட்டத்திலாவது அரச ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குகின்ற அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காத பொழுது எங்களுக்கு வீதியில் இறங்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும்.

எனவே இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கின்றோம், விரைவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சலுகைகளை  வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதனை கூறிக் கொள்கின்றோம்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் உரிமைகளுக்காகவும் நாட்டில் ஏற்படுகின்ற அராஜகங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்ற மக்களினை அடக்கி ஒடுக்கி அவர்களை கைது செய்கின்ற ஒரு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு, மனித உரிமைகளை அடக்க முற்படுகின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை கைவிட்டு மனித உரிமையினை நிலை நாட்ட அரசாங்கம் முன் வரவேண்டும் என்கின்ற கோரிக்கையும் முன்வைக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.