பயங்கரவாதி மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்? கைது செய்து ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் உத்தரவு

Prasu
2 years ago
பயங்கரவாதி மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்? கைது செய்து ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் உத்தரவு

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

1999-ம் ஆண்டு இந்தியாவின் பயணிகள் விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனைகள் விதித்தனர். 

இதையடுத்து மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். 

இந்தியா, சர்வதேச நாடுகள் அழுத்தத்தால் மசூர் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டு காவலில் வைத்தது. ஆனால் அவரை லாகூர் கோர்ட்டு விடுவித்தது. 

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. 

அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி யது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார். 

அவரை தேடி வருகிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்று நம்புகிறோம். 

அவர் நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.