ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

#Queen_Elizabeth #Death
Prasu
2 years ago
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் 7 முறை வரிசையில் மணிக்கணிக்கில் காத்துக்கிடந்து ராணியின் உடலுக்கு மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார். 

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் மீண்டும் மீண்டும் வரிசையில் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 

நான் என் மரியாதையை இப்படி செலுத்த விரும்பினேன். ஒவ்வொரு முறையும் தேவாலயத்துக்குள் சென்று, ராணிக்கு அஞ்சலி செலுத்தி வார்த்தைக்கு வராத உணர்வை அனுபவித்தேன்" என தெரிவித்தார். 

அங்கு 24 மணி நேர அஞ்சலிக்கு பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, எடின்பரோ விமான நிலையத்துக்கு நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. 

அங்கிருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவரது மகள் இளவரசி ஆனி விமானப்படையின் விமானத்தில் நேற்று லண்டன் எடுத்துச்சென்றார். 

லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு 'பவ்' அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது