டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு விற்க ஒப்புதல் அளித்த பங்குதாரர்கள்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து, 44 பில்லியன் டாலர்க்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க அந்நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி அந்நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது அந்நிறுவனம் வழக்குத்தொடர்ந்தது.
இந்நிலையில் , டுவிட்டரை எலான் மாஸ்க்கிற்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். காணொளியில் நடந்த வாக்கெடுப்பில் பங்குதாரர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
எனினும் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் கோர்ட்டு மூலமே இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படலாம் என்று கூறப்படுகின்றது.