அம்பாந்தோட்டை துறைமுகம் வெறும் வர்த்தக துறைமுகமே தவிர இராணுவ துறைமுகம் அல்ல - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Kanimoli
2 years ago
அம்பாந்தோட்டை துறைமுகம் வெறும் வர்த்தக துறைமுகமே தவிர இராணுவ துறைமுகம் அல்ல - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகம் வெறும் வர்த்தக துறைமுகமே தவிர இராணுவ துறைமுகம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் இலங்கை தலையிடக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“துரதிஷ்டவசமாக, இந்து சமுத்திரத்தில் நிலவும் புவிசார் அரசியல் நிலைமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை மோதலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவால் இயக்கப்படும் 17 துறைமுகங்கள் உள்ளன. அவை பல்வேறு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன, அவற்றில் சில டுபாய் உலக துறைமுக நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் வர்த்தக துறைமுகங்களாகும்.

அம்பாந்தோட்டையும் இதேபோன்ற வர்த்தக துறைமுகமாகும். இது போர் துறைமுகம் அல்ல. பாதுகாப்பு முக்கியம். ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் அந்த வகையாக இருக்கலாம்.

[ஏனென்றால், ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க இராணுவப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் துறைமுகங்கள் சீனத் துறைமுகங்களுக்கு எதிரே செயல்படுகின்றன.

எங்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை. யாரும் இங்கு வந்து பயிற்சி எடுக்க அனுமதிப்பதில்லை.

எமது கடற்படையின் தெற்குப் படையணி, இராணுவப் பிரிவுத் தலைமையகம், விமானப்படை ஆகியன அங்கம் வகிக்கின்ற போதிலும், அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக செயற்பட வேண்டும்.
வர்த்தக துறைமுகமான அம்பாந்தோட்டையுடன் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இது வர்த்தக துறைமுகமாக இருந்தாலும், தந்திரோபாயமான இடமாக இருப்பதால், சிலர் பல்வேறு கருத்துகளை கூறுவதை ஏற்க முடியாது.

சீனாவுடன் நாம் செய்து கொள்ளும் அடுத்த ஒப்பந்தம், இதுபோன்ற சந்தேகங்களை ஏற்படுத்தாது என நம்புகிறேன். நமது கடனை குறைப்பதற்காகவே சீனாவுடனான அடுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.