கொழும்பில் பல பிரதேசங்களில் இரண்டு கோடி மதிப்பிலான பொருட்களைத் திருடிய நபர்கள் கைது

Prathees
2 years ago
கொழும்பில் பல பிரதேசங்களில் இரண்டு கோடி மதிப்பிலான பொருட்களைத் திருடிய நபர்கள் கைது

இரவோடு இரவாக வீடுகளுக்குள் நுழைந்து இரண்டு கோடிக்கு மேல் பெறுமதியான தங்கம் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்ற  குற்றவாளி உட்பட இருவரை கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் விலை மதிப்பற்ற பழங்காலப் பொருட்கள் உட்பட பல சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் உரிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பேட்டதந்திரி, மற்றுமொரு விசாரணையை மேற்கொள்வதற்காக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்திருந்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளின் படி மாளிகாகந்த பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள ஐந்து வீடுகளில் சொத்துக்கள், தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட பல வழக்குகளின் விபரங்களை பொலிஸார்  வெளிக்கொணர முடிந்துள்ளது.

இதன்படி, திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் மாளிகாகந்த ஆர்.பி.வத்தையில் வசிக்கும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​இரண்டு கோடிக்கு அதிகமான பெறுமதியான பணம்இ தங்கம் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த  பொருட்களின் மதிப்பு இரண்டு கோடிக்கும் அதிகம் என்றும், அதில் விலையில்லா பழங்கால பொருட்கள் இருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தற்போது இதற்கு முன்னரும்  சொத்துக்களைத் திருடியமை தொடர்பான வழக்கை எதிர்நோக்கி வருவதாகவும், அவர் நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், சம்பந்தப்பட்ட பொருட்களின் உண்மையான உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் பொருட்களை கையளிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.