பிக்குவிடம் இருந்த 72 லட்சம் ரூபாவை கொள்ளையிட்ட யுவதி வெளிவந்த மர்மம்

Kanimoli
2 years ago
பிக்குவிடம் இருந்த 72 லட்சம் ரூபாவை கொள்ளையிட்ட யுவதி வெளிவந்த மர்மம்

தென் கொரியாவில் இருந்து வந்த தமது உறவினரை அழைத்து வர கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசகரான பிக்குவிடம் இருந்த 72 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட யுவதி சம்பந்தமாக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிக்கு மற்றும் அவரது வாகன சாரதியை மயக்கமுற செய்து யுவதி பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்குவின் மகன் முறை உறவினரான ஒருவர் தென் கொரியாவில் இருந்து கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் அவரை அழைத்து வர பிக்கு, தனது சாரதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இளைஞனை வரவேற்க அவர் தென் கொரியாவில் இருக்கும் போது முகநூலில் அறிமுகமான யுவதியும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதனிடையே நாடு திரும்பிய இளைஞன் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது இளைஞன் தன்னிடம் இருந்து சுமார் 72 லட்சம் ரூபாவை பணத்தை அவரது உறவினரான பிக்குவிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இளைஞனுக்கு முகநூலில் அறிமுகமான பெண் தனக்கும், சாரதிக்கும் அருந்துவதற்காக குளிர் பானத்தை கொண்டு வந்து கொடுத்ததாகவும் அதனை அருந்திய பின்னர் தனக்கும் சாரதிக்கும் மயக்கம் ஏற்பட்டதாகவும் பிக்கு பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பின்னர், யுவதியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை தெமட்டகொடையில் இறக்கி விட்டதாகவும் இதன் பின்னர் இளைஞன் வழங்கிய பணத்தை வைத்த இடத்தில் தேடிய போது அது அங்கு இருக்கவில்லை எனவும் பிக்கு தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் யுவதி தொடர்பான தகவல்களை இதுவரை சரியாக கண்டறிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இது திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் நடவடிக்கையாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.