உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட 30000டன் தானியங்களை ஏற்றிய இரண்டு சரக்கு கப்பல்கள்

Prasu
2 years ago
உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட  30000டன் தானியங்களை ஏற்றிய  இரண்டு சரக்கு கப்பல்கள்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  நடவடிக்கை தொடர்ந்து, உலக நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உணவு தானியங்களை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் கடந்த மாதம் உக்ரைனின் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிக் கொண்டு முதல் சரக்கு கப்பல் துருக்கிக்கு சென்றடைந்தது. கருங்கடலில் பிப்ரவரியில் நிறுவப்பட்ட முற்றுகையை நீக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து இதுவரை தானியங்களை ஏற்றிக் கொண்டு 145 க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஏற்கனவே உக்ரேனிய துறைமுகங்களை விட்டு வெளியேறியுள்ளன.

இதனை அடுத்து தற்போது 30 ஆயிரம் டன் தானியங்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டதாக துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த கப்பல்கள் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்றும், அதன் பிறகு உணவு உதவி தேவைப்படும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான எத்தியோப்பியாவில் தானியங்கள் விநியோகிக்கப்படும் ஒடேசா பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.