மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் - அலி சப்ரி

Kanimoli
2 years ago
 மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் - அலி சப்ரி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் சிறிலங்கா அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முக்கிய நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம், பிளவுபடுத்தும் பொறிமுறை என்பதால், அதனை ஏற்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு தீர்மானம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அலி சப்ரி, தற்போதைய தருணத்தில் இந்தத் தீர்மானம் தேவையற்ற ஒன்றென கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஆசீர்வாதமும் இலங்கைக்கு தேவை என்பதை எடுத்துக்கூறியுள்ளதாக இலங்கையின் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என அமைச்சர் சப்ரி வலியுறுத்தினார்.

இந்த கடமையை நிறைவேற்றும் பணிகள் தொடரும் எனவும் உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பால், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் தாம் தொடர்ந்து எதிர்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான புதிய வரைவுத் தீர்மானம், அதிகாரப் பகிர்வு, தேர்தலை நடத்துதல், காணாமல் போனவர்களின் அவல நிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுதல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் எந்தக் கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்று நான்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வெவ்வேறான நபர்கள் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றார்கள் எனவும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.