நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற தமது ஆதரவை வழங்க முடிவு

Kanimoli
1 year ago
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற தமது ஆதரவை வழங்க முடிவு

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற தமது ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்தனர்.

இன்றைய தினம் (22) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தூதுவர்கள் மன்றத்தில் அவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

இந்த மன்றத்தில் 23 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், பரிஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இருந்து இலங்கை மீள முடியும் என வெளிநாட்டு தூதுவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்த முயற்சியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கியுள்ளனர்.

அடுத்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக நாடு எதிர்கொள்ள வேண்டிய சவால் இது எனவும் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் எல்லா நேரங்களிலும் உறுதி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தாரக பாலசூரிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர், அதிபர் செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.