தேவையான பொருட்களின் பட்டியலை கொடுங்கள்: இலங்கைக்கு சீனா தகவல்..

Prathees
1 year ago
தேவையான பொருட்களின் பட்டியலை கொடுங்கள்: இலங்கைக்கு சீனா தகவல்..

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Shenhong  ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக இந்த சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக, தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் இலங்கையின் இறைமைக்கான சீனாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் விசேடமாக குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று இருதரப்பு நட்பு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்குவதற்காக விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது என்று பிரதமர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தில் தமது நாடு திருப்தியடைவதாக சீனத் தூதுவர் Qi Shenhong இங்கு தெரிவித்தார்.

இந்த நிதியத்தில் சீனாவும் அங்கத்துவம் பெற்றுள்ளதால், சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என தூதுவர் உறுதியளித்துள்ளார்.

சீனா ஏற்கனவே 400,000 டொலர் பெறுமதியான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

வேறு ஏதேனும் தேவை இருந்தால் பட்டியலை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்வரும் சீன தேசிய தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.