கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம் - பாகிஸ்தான் சிறை ஊழியர்களின் வன்கொடுமை

#Pakistan #Prison #Women #Sexual Abuse
Prasu
1 year ago
கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம் - பாகிஸ்தான் சிறை ஊழியர்களின் வன்கொடுமை

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை பார்ப்பதற்காக வரும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பெண்களை, சிறை ஊழியர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என மாகாண உளவு துறை மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. 

அட்டோக் சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்துள்ளது. அந்த சிறையில் மாபியா கும்பல் அதிக அளவில் அடைக்கப்பட்டு உள்ளனர். சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் சிறையில் உலா வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுபற்றிய அறிக்கை ஒன்றை உளவு மையத்தின் பணியாளர், சிறைகளுக்கான ஐ.ஜி. மிர்சா ஷாகித் சலீம் பெய்க்கிடம் ஒப்படைத்து உள்ளார். தொடர்ந்து, டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கைதிகளாக அடைப்பட்டிருப்பவர்களை பார்க்க வரும் பெண்களை சில சிறை ஊழியர்களே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என சிறை பணியாளர் ஒருவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது. 

இதனால், பஞ்சாப் நிர்வாகத்தின் கையாலாகாத செயல்பாட்டின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்துள்ளதுடன், வருங்காலத்தில் அவதூறுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, கூடுதல் செயலாளர் மட்டத்திலான உயரதிகாரி தலைமையில் அதிக ஆற்றல்மிக்க கமிட்டி, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும்படியும், உளவு துறை ஊழியர் வலியுறுத்தி உள்ளார். இதுதவிர, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சிறையில் கைதி ஒருவரை சந்திப்பதற்கு வரும் ஒரு சிறுமி, கைதிகளுக்கு போதை பொருட்களை வினியோகித்து வருகிறார் என்றும் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது. இதன்படி, சிறைக்கு வெளியே, ரூ.500-க்கு விற்கப்படும் சாராய பாக்கெட்டுகள் சிறைக்குள்ளேயே ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை ஜோராக விற்கப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.