மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை படம் பிடித்த பிரபல நாட்டு பத்திரிகையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

Prasu
1 year ago
மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை படம் பிடித்த பிரபல நாட்டு பத்திரிகையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 2020-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

இங்கு வெற்றி பெற்றவர்கள் எம்.பி.யாக பதவி ஏற்க இருந்த நாளில் (கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 தேதி) ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 

இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து சூகி கட்சி வெற்றி பெற்றதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. யாங்கான் நகரில் நடந்த போராட்டத்தைப் படம் பிடித்ததாக ஜப்பான் நாட்டின் பத்திரிகையாளர் டோரு குபோடா கைது செய்யப்பட்டார். அவர் மீது மின்னணு பரிமாற்ற சட்டத்தை மீறியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி முதல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகளும், 2-வது குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டின் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. 

அவர் தண்டனையை ஒரே காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பாங்காக் நகரத்திலுள்ள ஜப்பான் துணைத்தூதர் டெட்சுவோ கிடாடா இந்த தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த தண்டனைத் தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.