வெறும் 1 யூரோவுக்கு தன் நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்
ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது.
ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகளில் குறித்த பங்குகளை திரும்ப வாங்கும் உரிமையும் நிசான் நிறுவனம் பெற்றுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது.மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நிசானின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மையம் உள்ளிட்டவையும் NAMI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத நெருக்கடியால் ரஷ்யாவில் நிசான் நிறுவனத்திற்கு 687 மில்லியன் டொலர் இழப்பு எனவும், ஆனால் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டிற்கான அதன் வருவாய் முன்னறிவிப்பை ஈடுகட்டும் என்றே கூறுகின்றனர்.மேலும், நிசான் நிறுவனத்தின் 43% பங்குகளை கொண்டுள்ள ரெனால்ட் நிறுவனத்திற்கு 2022 இன் இரண்டாம் பாதியில் அதன் நிகர வருமானத்தில் 331 மில்லியன் யூரோ இழப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
நிசான் தனது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் சப்ளை செயின் சீர்குலைவு காரணமாக மார்ச் மாதம் உற்பத்தியை நிறுத்தியது. ஆனால் அதன் பின்னர் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை என்றே நிசான் சுட்டிக்காட்டியுள்ளது.