சிங்கப்பூரில் கடவுள் போல் நடித்த பக்தர்களை மலம் உட்கொள்ளக் கட்டாயப்படுத்திய பெண்!
சிங்கப்பூரில் பெண் ஒருவர் தான் கடவுளின் ரூபம் என்று பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
52 வயதான வூ மே ஹோ (Woo May Hoe) எனும் பெண்ணே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
அவற்றுள் மற்றவர்களை ஏமாற்றியது, ஆபத்தான திரவத்தைக் கொண்டு காயம் விளைவித்தது, மோசமான காயங்களை ஏற்படுத்தியது முதலியவை அடங்கும்.
2012ஆம் ஆண்டு முதல் 2020 மே வரை அத்தகைய குற்றச்செயல்களில் வூ ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
14 பேர் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. வூ அவர்களில் சிலரின் பற்களைப் பிடுங்கச் செய்ததாகவும் கண்களுக்குள் ஆபத்தான திரவத்தை ஊற்றச் செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஐவரை மலத்தை உட்கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வூ பக்தர்களைத் துன்புறுத்தியதோடு சிலரிடமிருந்து சில மில்லியன் வெள்ளி ஏமாற்றியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு அக்டோபர்-முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்குப் பிணைத்தொகையாக 200,000 வெள்ளி நிர்ணயிக்கப்பட்டது.
அவர் அடுத்த மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு முந்திய சந்திப்புக்காக நீதிமன்றத்துக்குத் திரும்புவார்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.