புதிய வரி விதிப்பால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியில்
அரசால் விதிக்கப்படும் வரி அதிகரிப்பால் சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அந்த வணிகர்கள் கூறுகின்றனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளால் தங்களது தொழில்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிப்புக்கு முகங்கொடுத்து தமது கைத்தொழில் தொடர்வது மேலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் என சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருமான சட்டத்தில் புதிய திருத்தங்கள் மூலம் புதிய வரிகளை அரசாங்கம் விதித்துள்ளது.
இதன் மூலம், சிறு, நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வணிக நிறுவனங்களுக்கும் விதிக்கப்படும் வருமான வரியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 14 சதவீத வரி 30 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது.
ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களின் இலாபத்தின் மீது விதிக்கப்பட்ட வரி 14 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கான 18 சதவீத வரி விகிதம் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்பித்தல், விரிவுரைகள், பரீட்சைகளை நடாத்துதல், பரீட்சை கண்காணிப்பு போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் வெளி நபர் ஒருவர் மாதாந்தம் 100,000 ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டினால், அதில் 5 வீதம் பிடித்தம் செய்யும் வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.