அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனை சந்தித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

Prasu
1 year ago
அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனை சந்தித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில்  உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதுவரின் இல்லத்தில் நேற்று (13) நிகழ்ந்த இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி தெரிவித்ததாவது,

சமீபத்தில் நான் அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம். அவுஸ்திரேலியயாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கு தெரிவித்தேன். 

குறிப்பாக அவுஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள சிங்கள அவுஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன். பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு  சுட்டிக்காட்டினேன். 

ஆகவே இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசியலமைப்புரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கி உள்ளது. அதுவே மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளி என தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையக தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்ட தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்கட்சிகளின் உடனடி தேர்தலுக்கான கோரிக்கை  ஆகியவை பற்றியும் உரையாடினோம்.

இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள், தொழில்ரீதியாகவும், தமிழ் சிறுபான்மையினர் என்ற இனரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்து கூறினேன்.  பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு என அவுஸ்திரேலியா உட்பட உலக அரசாங்கங்கள் வழங்கும் உதவி தொகைகள், நன்கொடைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. 

நலிவுற்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் அரசு கடைபிடிக்கின்ற அளவுக்கோல்கள் பிழையானவை. அவை அரசியல் மற்றும் சில வேளைகளில் தவறான இன அடிப்படைகளை கொண்டவை. இதன் காரணமாக நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள் நலிவுற்றோர் பட்டியலில் இடம் பெறுவதில் தவிர்க்கப்படுகிறார்கள். 

ஆகவே இந்த நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுக்கோல்கள் பற்றி  ஆஸ்திரேலியா, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.  

உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி, புதிய மக்களாணையை பெறுவதன் மூலமாகவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, உலகரீதியான ஏற்புடைமை, பொருளாதார மீட்சிக்கான வழிவரைபு (Road Map) ஆகியன ஒழுங்கமைக்கப்படும் என கூறினேன்.