டெங்கு நோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு 36 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிப்பு
நாட்டில் டெங்கு நோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு 36 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும் பல பொது வைத்தியசாலைகளில் டெங்கு நோயைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் 'டெங்கு அன்டிஜென்' பரிசோதனையை நடத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் இல்லை என சுகாதார ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொண்டமைக்கான கடனை பல மாதங்களாக சுகாதார அமைச்சு செலுத்தத் தவறியதன் காரணமாக, சில நிறுவனங்கள் சர்வதேச அளவில் மதிப்பிழந்துள்ளதோடு, பல நிறுவனங்கள் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான FBC சோதனைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதையும் நிறுத்தியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகள் பிரிவுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 125 மில்லியன் ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படாததன் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தை நெருங்குகிறது.
கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 59,317 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகரிப்பு என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 19,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தியக் கடனுதவியின் கீழ் பெறப்பட்ட தொகையில் சுமார் 60 மில்லியன் டொலர்கள் 6 மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், ஒரேயொரு ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய ஆய்வுக்கூட பிரதிப் பணிப்பாளர் நாயகம் தவறியுள்ளதாக வலியுறுத்தியுள்ள தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ், இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார செயலாளரால் அவருக்கு அறிவிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் இதுவரை பதிலளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
“சுகாதார அமைச்சு டெங்கு உயர் ஆபத்து வலயங்களை மாத்திரமே அறிவித்துள்ள போதிலும், பாதுகாப்புக்காக நுளம்புகளை துரத்துவதைத் தவிர வேறு வழியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்” என சுகாதார நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.