அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் நிதியமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பாகிஸ்தான் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள 72 வயதான இஷாக் தார், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்த இறங்கிய அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சிலர், கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் தார் ஒரு பொய்யர் என்றும், திருடன் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது.
பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும் போது, பொது இடங்களில் சிலர் அவர்களை முற்றுகையிட்டு கோஷமிடுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம், லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை சிலர் முற்றுகையிட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இதேபோல் பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், ஒரு உணவகத்திற்கு சென்ற போது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிட்டதக்கது.