பலமுறை கத்தியால் குத்தி கொலை முயற்சி: இந்திய மாணவர் கவலைக்கிடம்- ஒருவர் கைது
உத்தரப் பிரதசேம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஷூபம் கர்க் (28). சென்னை ஐஐடியில் பட்டம் பெற்ற பிறகு மேற்படிப்புக்காக ஷூபம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி ஆஸ்திரேலியா சென்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி இரவு 10.30 மணியளவில் தெருவில் ஷூபம் சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் தர மறுத்ததை அடுத்து, மர்ம நபர் ஷூபமை கத்தியால் பலமுறை தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதையடுத்து ஷூபம் முகம், மார்பு மற்றும் வயிற்றில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இருப்பினும், இது ஒரு இனவெறி தாக்குதல் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஷூபமை சந்திக்க அவரது பெற்றோர் ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற முயற்சித்து வருகின்றனர்.
மேலும், ஷூபமின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது தங்கை பிரதமர் மோடி, உ.பி முதல்வரிடம் முறையிட்டார்.
இதையடுத்து, சிட்னியில் உள்ள இந்திய துணை தூதரகம் உதவியை வழங்கியுள்ளது.