அமெரிக்காவின் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினா தலைநகர் ராலேவில் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அவர் போலீசாரிடம் சிக்கினார்.
அந்த நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? என்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக ராலே நகர மேயர் மேரி-ஆன் பால்ட்வின் கூறும் போது, ராலேவில் உள்ள பிரபல இடமான நியூஸ் ரிவர் கிரீன்வே அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
ராலே நகருக்கு இது ஒரு சோகமான நாள் என்றார். அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி தான் உள்ளது.