உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ பைடன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து பேசும்போது, பாகிஸ்தான் குறித்து பைடன் பேசினார்.
தன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று எனவும், எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருக்கும் நாடு எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பைடன் இவ்வாறு கூறியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 48 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கொள்கை அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.