அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் புதன்கிழமை இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் புதன்கிழமை இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் மற்றும் ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் ஆகியோர் கடந்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது டொனால்ட் லூவின் பயணமும் இடம்பெறவுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்றும் இலங்கைக்கான டொனால்ட் லூவின் பயணத்தில் இணையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பல்வேறு அரச மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை அவர்கள் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிராந்தியம் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அவர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் லு அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கும் இலங்கை குறித்து அவர் கலந்துரையாடியிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, டொனால்ட் லுவும் அங்கிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.