சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சினால் தேவையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அமைச்சின் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் திரிவிட இராணுவத்தினரின் ஆதரவை நிவாரண வேலைத்திட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் ரணில் விக்ரமசிங்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையுடன் 11 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 52 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 15,404 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
05 வீடுகள் முழுமையாகவும் 193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 439 குடும்பங்களைச் சேர்ந்த 1927 பேர் தீவு முழுவதும் உள்ள 21 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போதைய நிலைமையினால் சுமார் 61,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.